பரோட்டா சூரிக்கு சிபாரிசு செய்த விஜய்!

Soori_1211_mவெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து, களவாணி, வேலாயுதம், சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி உள்பட பல படங்களில் சிறப்பாக காமெடி செய்திருந்தார். இதனால் சந்தானத்தின் கால்சீட் கிடைக்காத கம்பெனிகளெல்லாம் சூரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கின.
அதனால் தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கும் காமெடியனாகி விட்டார் சூரி. அதிலும் வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்திலும் முக்கிய காமெடியனாகியிருக்கிறார்.
வேலாயுதம் படத்தில், முதல் நாள் சூரியுடன் நடித்தபோது அவரது நடிப்பைப்பார்த்து வியந்த விஜய், யார் அந்த புதுக்காமெடியன்? என்று அவரைப்பற்றி விசாரித்தாராம்.
அதுவரை விஜய்யை விட்டு விலகியே நின்ற சூரி, அதன்பிறகு விஜய்யிடம் தன்னைப்பற்றி சொன்னதோடு, நெருக்கமாகி விட்டாராம். அதையடுத்து தன்னுடன் வருவது போன்று சூரிக்கு அதிக காட்சிகள் வைக்குமாறு சொன்ன விஜய், இப்போது ஜில்லா படத்திலும் சூரிக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இதனால் இந்த படத்திற்கு பிறகு சூரியும் சந்தானத்துக்கு இணையான இன்னொரு காமெடியனாகி விடுவார் என்கிறார்கள்.
இப்படி விஜய்யே தனக்கு நேரடியாக சிபாரிசு செய்வதால், ஜில்லாவில் மிகுந்த உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறாராம் சூரி.

0 comments:

Post a Comment